மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை வரைந்த பிரான்ஸ் பெண் ஓவியர்கள்
|செங்கல்பட்டு மாமல்லபுரம் வந்த கிறிஸ்டின், ஏக்னஸ் இருவரும் ஐந்துரதம் புராதன சின்ன பகுதியில் அமர்ந்து பஞ்சபாண்டவர் ரதங்களை நேரில் பார்த்து ஒவ்வொரு ரதங்களையும் ஓவியங்களாக வரைந்து அசத்தினர்.
மாமல்லபுரம்,
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் கிறிஸ்டின் (வயது 65). இவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அரசு வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், மற்றொருவர் ஏக்னஸ் (66), இவர் பாரீஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கிறிஸ்டின், ஏக்னஸ் இருவரும் பள்ளி தோழிகளாவர். இருவரும் ஓவியத்தில் ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு 4 சுவர்களுக்கிடையே முடங்கி கிடக்காமல் இந்தியாவில் 500 பாரம்பரிய புராதன சின்னங்களையும், கோவில்ளையும் ஓவியமாக வரைய இலக்கு நிர்ணயித்து கொண்டனர். பின்னர் பிரான்சில் வசித்து வரும் ஓவிய கலைஞராக உள்ள புதுச்சேரியை சேர்ந்த ஆபெல் (வயது 43), என்பவரை அணுகி இந்தியாவில் உள்ள புராதன சின்னங்களை வரைய வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்து, உதவிக்கு அவரை உடன் அழைத்து வந்தனர்.
செங்கல்பட்டு மாமல்லபுரம் வந்த கிறிஸ்டின், ஏக்னஸ் இருவரும் ஐந்துரதம் புராதன சின்ன பகுதியில் அமர்ந்து பஞ்சபாண்டவர் ரதங்களை நேரில் பார்த்து ஒவ்வொரு ரதங்களையும் ஓவியங்களாக வரைந்து அசத்தினர்.
மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து புராதன சின்னங்களையும் ஓவியமாக வரைந்த பிறகு, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள புராதன சின்னங்களை ஓவியங்களாக வரைய உள்ளனர்.