சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு...பயணிகள் அவதி...!
|நேற்று இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
செங்கல்பட்டு,
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி நேற்று 46 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் ஒன்று இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் பழைய இரும்பு தளவாட பொருட்கள் இருந்தன. சென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இந்த இரும்பு பொருட்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகில் (பழைய தாலுகா அலுவலகம் ரெயில்வே கேட் அருகே) வந்தபோது, திடீரென்று தடம் புரண்டது. ரெயிலில் 9 பெட்டிகள் அடுத்தடுத்து தண்டவாளத்திலிருந்து விலகி தரையில் சரிந்து நின்றன. இதனால் தண்டவாளம் இரண்டாக உடைந்தது.
இதையடுத்து சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தண்டவாளத்தை சீரமைத்து ஜாக்கி கருவிகள் உதவியுடன் ரெயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணிகள் நடைபெற தொடங்கின. இதில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.
நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 8 மணி நேரமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரெயில்களும் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. புறநகர் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் பயணிகளும் அவதி அடைந்துள்ளனர். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரெயில்கள் இன்று சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.