< Back
மாநில செய்திகள்
கஞ்சா வழக்கில் 2 பேரின் சொத்துக்கள் முடக்கம்
மதுரை
மாநில செய்திகள்

கஞ்சா வழக்கில் 2 பேரின் சொத்துக்கள் முடக்கம்

தினத்தந்தி
|
20 May 2022 2:41 AM IST

கஞ்சா வழக்கில் 2 பேரின் சொத்துக்கள் முடக்கம்

மதுரைகஞ்சா வழக்கில் 2 பேரின் சொத்துக்கள் முடக்கம்

மதுரை சேடப்பட்டி பகுதியில் கஞ்சா வழக்கில் பெண் உள்ளிட்ட 2 பேரின் பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது.

கஞ்சா கடத்திய பெண் கைது

மதுரை மாவட்டம் சேடப்பட்டி அழகுரெட்டியபட்டி பாலம் அருகில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்த போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த காரை சோதனை செய்ய சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் காரில் இருநத சந்திரன் (என்ற) ரவிச்சந்திரன் தப்பி ஓடி விட்டார்.

ஆனால் காருக்குள் இருந்த அவரது மனைவி வனபேச்சியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் 25 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வனபேச்சியை கைது செய்து, காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தோட்டத்தில் கஞ்சா பதுக்கல்

இதே போன்று சேடப்பட்டி அருகில் உள்ள அல்லிக்குண்டத்தில் பாலமுருகன் (வயது 28) என்பவரின் தோட்டத்தில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சேடப்பட்டி போலீசார் அங்கு சென்று சோதனை செய்த போது அங்குள்ள கொட்டகையில் 41 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் எருமார்பட்டி, காராம்பட்டியை சேர்ந்த காரிகாளை (என்ற) மொக்கை (50), அவரது மகன் போதுராஜா (23) ஆகியோர் தான் கஞ்சாவை கொடுத்து வைத்திருந்தனர் என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வந்தனர். இந்தநிலையில் கஞ்சா கடத்தியதாக போதுராஜா கைது செய்யப்பட்டார்.

2 பேரின் சொத்துக்கள் முடக்கம்

இந்த நிலையில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ராகார்க் மற்றும் மதுரை சரக டி.ஐ.ஜி.பொன்னி ஆகியோர் இந்த 2 வழக்குகளில் சம்பந்தப்பட்ட கஞ்சா வியாபாரிகளின் அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை சேகரித்து அனைத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன் பேரில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி, பேரையூர் துணை போலீஸ்சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பற்றிய விவரங்களை சேகரித்தனர்.

அதில் கைது செய்யப்பட்ட வனபேச்சிக்கு சொந்தமான அழகுரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 3 அடுக்கு மாடி வீடும், 2-வது வழக்கில் தொடர்பு உடைய காரிக்காளைக்கு சொந்தமான எருமார்பட்டி கிராமத்திலுள்ள சுமார் ரூ.28,71,005 மதிப்புள்ள வீடு ஆகிய சொத்துக்கள் சட்டப்படி முடக்கப்பட்டது. இதற்கான ஆவணங்கள் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.

நடவடிக்கை தொடரும்

இதுகுறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறும்போது, கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர கஞ்சா கடத்துபவர்கள் மட்டுமல்லாது அவர்களின் உறவினர்களின் சொத்துக்களும் முடக்கப்படும். மதுரையில் 2-ம் கட்டமாக தற்போது கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என்றார்.

தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் கூறும்போது, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 17 பேரின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 2-ம் கட்டமாக தற்போது மதுரையில் 2 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பவர்களின் மீதான இந்த நடவடிக்கை தொடரும். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்