< Back
மாநில செய்திகள்
1946-ம் ஆண்டு சுதந்திர போராட்ட உரை அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட கோரிக்கை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

1946-ம் ஆண்டு சுதந்திர போராட்ட உரை அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட கோரிக்கை

தினத்தந்தி
|
14 Oct 2022 2:49 PM IST

1946-ம் ஆண்டு சுதந்திர போராட்ட உரை நிகழ்த்திய அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டிய பகுதியில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க அச்சரப்பாக்கம் ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையம் நூற்றாண்டு கடந்த வரலாற்று சிறப்பு மிக்க ரெயில் நிலையமாகும். இங்கு அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ரெயில்வே துறைக்கும், மத்தியஅரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் அச்சரப்பாக்கம் புதுப்பேட்டையை சேர்ந்த எஸ்.எம்.ஷாஜகான் கூறியதாவது:-

1946-ம் ஆண்டு மகாத்மா காந்தி சிறப்பு ரெயில் மூலம் சுதந்திர போராட்ட வேட்கையின் உரை நிகழ்த்த மதுரை சென்றார். அப்போது அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் தங்கி சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே சுதந்திர போராட்ட உரை நிகழ்த்தினார். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர்கள் ராஜாஜி, காமராஜர் இங்கு சுதந்திர போராட்ட உரை நிகழ்த்தினர். இந்த ரெயில் நிலையத்தை நவீன படுத்தியும், மேம்படுத்தியும் வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர போராட்ட நினைவு ரெயில் நிலையமாக அறிவித்து சிறப்பு சேர்த்திட வேண்டும். அனைத்து பயணிகள் மின்சார ரெயிலை அச்சரப்பாக்கம் வரை இயக்க வேண்டும். இந்த ரெயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தி ரெயில் நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அச்சரப்பாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் கூறுகையில் :-

சிறப்புமிக்க அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களை அச்சரப்பாக்கம் வரை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அச்சரப்பாக்கம் புதுப்பேட்டை முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் வீரமணி கூறிய தாவது:-

அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். பயணிகள் மின்சார ரெயில்களை அச்சரப்பாக்கம் வரை இயக்க வேண்டும். அச்சரப்பாக்கம் பெருகருணை சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் ரெயில்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஜி.எஸ்.டி. சாலை வரை நிற்கிறது.

இதனால் ரெயில்வே கேட் மேம்பாலம் ரெயில்வே துறை சார்பில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை மாநில அரசால் மாநில நெடுஞ்சாலை மூலம் சாலையும் மேம்பாலமும் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி மாநில நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெயில்வே கேட் மேம்பாலத்தை அமைத்து திறந்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளி பேட்டை நித்தியானந்தம் கூறுகையில் :-

அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரெயில்களை அச்சரப்பாக்கம் வரை இயக்க வேண்டும். அச்சரப்பாக்கம் பெருக்கரணை செல்லும் ரயில்வே கேட் மேம்படுத்தப்பட வேண்டும். ரெயில்வே நிர்வாகத்தால் கட்டி முடிக்கப்பட்டு குறையாக உள்ள ரெயில்வே கேட் மேம்பாலத்தை தமிழக நெடுஞ்சாலைத்துறை உடனடியாக கட்டவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அச்சரப்பாக்கம் பேரூராட்சி உறுப்பினர் முருகதாஸ் கூறியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க அச்சரப்பாக்கம் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தி மேம்படுத்தி தரம் உயர்த்த வேண்டும். ரெயில் நிலையம் செல்வதற்கு புதியதாக சுற்றிலும் பல சாலைகள் வடிவமைத்து, வழிகளையும் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்