சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது- அமைச்சர் எ.வ.வேலு
|சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகின்றன என மாணவர்கள், உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
சைக்கிள்கள் வழங்கும் விழா
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் விழா திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து விழாவை நடத்தின.
விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வித்துறை அலுவலர் கணேஷ்மூர்த்தி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் உலமாக்களுக்கும் சைக்கிள்களை வழங்கினார்.
பணி நியமன ஆணைகள்
மேலும் 2014 மற்றும் 2018-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் வாரிசுதாரர்கள் 4 பேருக்கும் மற்றும் சத்துணவு மையத்தில் பணியின்போது காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கும் கருணை அடிப்படையில் சத்துணவு மையத்தில் பணி நியமன ஆணை வழங்கினார். மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மாரியாதை செலுத்தி ஆசிரியர்களை கவுரவித்தார்.
அதை தொடர்ந்து அவர் பேசியதாவது:-
திராவிட மாடல் ஆட்சி
உலகில் 2 புனிதமான இடங்கள் உள்ளது. ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் உயிர் கொடுக்கப்படுகிறது. ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுகிறார்கள். ஆசிரியர்களின் சேவைக்கும், பொறுமைக்கும், தியாக மனப்பான்மைக்கும் மரியாதை செலுத்துகின்ற தினமாக ஆசிரியர் தினம் பார்க்கப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் கொடுக்கப்படுவது இலவசமல்ல. சமூக நீதியை உருவாக்குவதற்காக இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் அரசின் உதவி. இலவசங்களை சிலர் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர்.
அனைவரையும் வளர்ச்சி பாதையில் கொண்டு வந்து ஒரே இடத்திற்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டு தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது. சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காக தான் இலவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை குடும்பத்தினர் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்காக மிகவும் பாடுபட்டவர்கள் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர். அவர்களின் பெரும் முயற்சியால் இன்று பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்குகின்றனர். உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.