சிவகங்கை
அரசு சார்பில் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி மையம்
|காரைக்குடி அருகே அரசு சார்பில் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே அரசு சார்பில் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
ஆய்வு
காரைக்குடி அருகே அமராவதி புதூர் கிராமிய பயிற்சி மையத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையம் (நீட்) அமைக்கப்பட உள்ளது. இதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 23-ந் தேதி நிறைவு பெறுகிறது. மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு நீட் தேர்வில் தகுதி பெறுவது தற்போது அடிப்படை என்பதால் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகும் வண்ணம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களை கணக்கிட்டு அவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வருகிற 28-ந்தேதி சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களையும் வரவழைத்து ஆலோசனை வழங்கப்பட்டு, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
நீட் தேர்வுக்கு மையம்
காரைக்குடி அமராவதிபுதூர் கிராமிய பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைய உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சி அளிப்பதற்கான புத்தகங்கள், தேர்வுக்கு தயாராவதற்கு தேவையான மாதிரி வினா விடைத்தாள்கள் போன்றவற்றை இலவசமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட உள்ளது.
இதில் 150 முதல் 200 மாணவர்கள் வரை தங்கி படிப்பதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர் வசதிகள் போன்றவற்றுடன் தினந்தோறும் காலை முதல் மாலை வரை பயிற்சி வகுப்பு நடத்திடவும் நடத்திய பயிற்சி வகுப்புகளுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தவும், அது குறித்த வினாத்தாள்கள் தயாரிக்க ஆசிரியர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் பயிலும் படிக்கும் மாணவ-மாணவியர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கி அவர்கள் பயில்வதற்கு தேவையான கல்வி கட்டணங்களையம் அரசே செலுத்தி வருகிறது இது போன்று அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்ந்து உயர் படிப்புக்களை படிக்க அதற்கு தேவையான நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி சிவராமு, கிராமிய பயிற்சி மைய இயக்குனர் ஆறுமுகம், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரங்கநாதன், உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, சாக்கோட்டை யூனியன் ஆணையாளர் கேசவன் ஆகியோர் உடனிருந்தனர்.