விழுப்புரம்
4 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள்
|விழுப்புரம் மாவட்டத்தில் 4 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
விழுப்புரம்
விலையில்லா பாடப்புத்தகங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 1,806 பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. வகுப்புகள் தொடங்கிய முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக அரசு பாடநூல் கழகத்தின் மூலம் சென்னை, ஐதராபாத், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அச்சகத்தில் பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
பள்ளிகளுக்கு அனுப்பும் பணி
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 4 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் இங்கிருந்து விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டன. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அந்தந்த கல்வி மாவட்டங்களில் இருந்து பள்ளிகள் வாரியாக பாடப்புத்தகங்களை பிரித்து அவற்றை வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விலையில்லா பாடப்புத்தகங்களை வாகனங்களில் பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.