பெரம்பலூர்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
|மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது.
குன்னம்:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகியவை இணைந்து நடத்திய மாற்று திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைக்கு பதிவு செய்து, உதவி உபகரணங்கள் தேவைப்படுபவர்களை கண்டறியப்பட்டது.
முன்னதாக முகாமை பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) அண்ணாதுரை, முன்னிலை வகித்தனர். வேப்பூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். முகாமில் உதவி திட்ட அலுவலர்கள் ஜெய்சங்கர், ரமேஷ், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாவூத் அலி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், ஆசிரிய பயிற்றுனர் சித்ரா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் சிறப்பு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதனை செய்தனர்.
இம்முகாமில் 88 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டது. 9 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டது. தசைச்சிதைவு பாதிப்படைந்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1.06 லட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இறுதியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.