திருவாரூர்
இலவச மருத்துவ முகாம்
|நீடாமங்கலத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் மற்றும் முதல்அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கான பதிவு முகாம் நீடாமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்து லட்சுமி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்றத்தலைவர் ராம்ராஜ் முன்னிலை வகித்தார். முகாமை ஒன்றிய குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்கினார். டாக்டர்கள் சரண்யா, உதயா, திருஒளி, பிரியதர்ஷினி மற்றும் சுகாதார செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் 400 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர். சுமார் 250 பேர்கள் மருத்துவ காப்பீட்டிற்காக பதிவு செய்து கொண்டனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாபிள்ளை, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் சிவகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திருப்பதி, கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.