தலைமைச்செயலக பணிக்கான எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி -தமிழக அரசு அறிவிப்பு
|பணி மாறுதல் மூலம் நியமனம்: தலைமைச்செயலக பணிக்கான எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி தமிழக அரசு அறிவிப்பு.
சென்னை,
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆண்கள் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் இயங்கும் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தலைமைச்செயலகத்தில் காலியாக உள்ள 161 உதவிப்பிரிவு அலுவலர், உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் பணிபுரியும் தகுதிவாய்ந்த உதவியாளர், இளநிலை உதவியாளர்களை கொண்டு பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் பணிபுரியும் தகுதிவாய்ந்த உதவியாளர், இளநிலை உதவியாளர்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் வருகிற 26-ந் தேதிக்குள் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் செயல்பட்டுவரும் போட்டித்தேர்வுகள் பயிற்சி மைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ceccnandanam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
பயிற்சி வகுப்புகள் 29-ந்தேதி தொடங்குகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் நவம்பர் மாதம் வரை பயிற்சி நடைபெறும். மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.