< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 412 மையங்களில் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
மாநில செய்திகள்

தமிழகத்தில் 412 மையங்களில் 'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

தினத்தந்தி
|
5 Nov 2022 8:40 AM IST

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.

சென்னை,

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆரம்பத்திலிருந்து தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒன்றியத்துக்கு ஒரு பயிற்சி மையம் என்ற அடிப்படையில் 412 நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்களை ஏற்படுத்தி அதன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை நேற்று வெளியிட்டிருக்கிறது. அதில், போட்டித் தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 3-வது வார சனிக்கிழமைகளில் இருந்து, ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. போட்டி தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 50 பேரும், 11-ம் வகுப்பு மாணவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒன்றியத்துக்கு அதிகபட்சம் 20 பேரும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்