காஞ்சிபுரம்
மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி நடைபெறுகிறது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 63 மேல்நிலைபள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 3,408 பேர், மாணவிகள் 4,794 பேருக்கு ரூ.3 கோடியே 95 லட்சத்து 18 ஆயிரத்து 640 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட வாலாஜாபாத், அவலூர், நாயக்கன் பேட்டை, ஏகனாம்பேட்டை, அய்யம்பேட்டை, தென்னேரி போன்ற பகுதிகளில் அரசு மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 1,108 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா வாலாஜாபாத் அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன் கலந்துகொண்டு தமிழக அரசின் கல்விக்கான நலத்திட்ட பணிகளை மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறி விலையில்லா சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.
விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன், காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, ஒன்றிய குழு தலைவர்கள் ஆர்.கே.தேவேந்திரன், மலர்க்கொடி குமார், ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர், வாலாஜாபாத் தாசில்தார் சுபபிரியா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.