நாகப்பட்டினம்
மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
|நாகையில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
வெளிப்பாளையம்:
நாகையில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்
நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த பள்ளி சுற்றுச்சூழல் நிறைந்த பகுதியாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோல் மரங்களை வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும்.
சுற்றுச்சூழல்
இந்த சைக்கிள் மூலம் சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது. இலவசங்களால் மக்கள் சோம்பேறியாக ஆகிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது. கடந்த 50 ஆண்டுகள் திராவிட ஆட்சிகளால் கொண்டுவரப்பட்ட இலவசங்களால் தான் தமிழகம் பல்வேறு நிலைகளில் வளர்ந்துள்ளது.
கல்வி மற்றும் பொருளாதார அளவில் மக்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்றார். அதேபோல் இலவசங்கள் தொடரும். இலவசங்களால் தான் கல்வி, பொருளாதாரம் முன்னேற்றம் அடைய முடியும்.
முன்னேற வேண்டும்
மாணவிகள் சிறப்பாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நாகைமாலி, முகமதுஷநவாஸ், மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, நகர் மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு வரவேற்றார். முடிவில் மாவட்ட பிற்பட்ட நல அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.