தூத்துக்குடி
தூத்துக்குடியில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
|தூத்துக்குடியில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு கால்டுவெல் பள்ளி தாளார் ஸ்டேன்லி வேதமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
அப்போது, தூத்துக்குடி எல்லா வகையிலும் வளர்ச்சி அடையும். தூய்மையான மாநகரத்தை உருவாக்கும் வகையில் நகரம் சுத்தமாக இருக்க வேண்டும். தினமும் 60 வார்டுகளில் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. 90 டன் மக்கும் குப்பையும், 60 டன் மக்காத குப்பையும் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில் பல பிளாஸ்டிக் கழிவுகளும் இருப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. நமது வீட்டை சுத்தமாக வைத்திருப்பது போல் நகரையும் சுத்தமாக வைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதை உங்களது பெற்றோர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் முக்கியம். விவசாயம் பார்க்கின்றவர்கள் 95 வயதிலும் இன்று வரை உழைக்கிறார்கள். அதற்கு காரணம் ஆரோக்கியம் சார்ந்த உடற்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் உள்ளங்கால் முதல் அனைத்து பகுதிகளும் ஒரே அளவு ரத்த ஓட்டம் பாய்வதால் நமது உடல் ஆரோக்கியம் பெறுகிறது. விடாமுயற்சி, தன்னம்பிக்கை இரண்டும் இருந்தால் எல்லா துறையிலும் நாம் சாதிக்கலாம் என்று கூறினார்.
விழாவில் பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர், உதவி தலைமையாசிரியர் டல்சி, வக்கீல் தினகரன், உடற்கல்வி ஆசிரியர் பெலின்பாஸ்கர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.