< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் மோசடி

தினத்தந்தி
|
16 Sept 2023 12:15 AM IST

நகை தொழிலாளி, விவசாயியிடம் ஆன்லைன் மூலம் நூதன முறையில் பணம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை தொழிலாளியிடம் பணம் மோசடி

விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 31), நகை தொழிலாளி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், தான் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், கடன் தேவையெனில் உங்களுடைய விவரங்களை அனுப்புமாறும் கூறினார்.

இதை நம்பிய மாரிமுத்து, தன்னுடைய ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை அனுப்பி வைத்த பிறகு அந்த நபர், மாரிமுத்துவை தொடர்புகொண்டு உங்களுக்கு ரூ.2 லட்சம் கடன் தருவதாகவும், அத்தொகையை உங்களுடைய வங்கி கணக்கில் செலுத்த நகர்வு கட்டணம், ஆவண கட்டணம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்காக பணம் அனுப்ப வேண்டும் என்றார். உடனே மாரிமுத்து, தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கி கணக்கிற்கு 15 தவணைகளாக ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 605-ஐ அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், மாரிமுத்துவுக்கு கடனுதவி ஏதும் வழங்காமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் மரக்காணம் தாலுகா செட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (55), விவசாயி. இவருடைய செல்போனுக்கு கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு ஒருவர், செல்போன் கோபுரம் அமைக்க இடம் தேவை, முன்பணம் ரூ.40 லட்சம், வாடகை ரூ.45 ஆயிரம் வழங்கப்படும் என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தார். பின்னர் ஹரிகிருஷ்ணனை தொடர்புகொண்ட அந்த நபர், தனியார் செல்போன்கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் உங்களுடைய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளதாகவும், அதற்கு ரூ.30 லட்சம் முன்பணமும், மாத வாடகையாக ரூ.30 ஆயிரமும் தருவதாக கூறியதோடு உங்களுடைய விவரங்களை அனுப்புமாறு கூறியுள்ளார்.

இதை நம்பிய ஹரிகிருஷ்ணன், தன்னுடைய ஆதார் அட்டை, சிட்டா அடங்கல் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அந்த நபர், செல்போன் கோபுரம் அமைக்க முன்பணம், ஜி.எஸ்.டி., செல்போன் கோபுரத்திற்கான உபகரணங்கள் ஆகியவற்றுக்காக பணம் கட்ட வேண்டும் என்று கூறியதால் கூகுள்பே மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கி கணக்கிற்கு 5 தவணைகளாக ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 840-ஐ ஹரிகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தை பெற்ற நபர், செல்போன் கோபுரம் அமைக்காமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இந்த சம்பவங்கள் குறித்து மாரிமுத்து, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்