< Back
மாநில செய்திகள்
செய்வினை எடுப்பதாக கூறி மோசடி போலி மந்திரவாதி, தோழியுடன் கைது
மாநில செய்திகள்

செய்வினை எடுப்பதாக கூறி மோசடி போலி மந்திரவாதி, தோழியுடன் கைது

தினத்தந்தி
|
27 Jun 2023 4:09 AM IST

சென்னையில் செய்வினை எடுப்பதாக கூறி சாய்பாபா பக்தரிடம் லட்சக்கணக்கில் நகை-பணம் மோசடி செய்த போலி மந்திரவாதி, தனது தோழியுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மோகன்நாத் (வயது 54). தீவிர சாய்பாபா பக்தரான இவர், தனது வீட்டில் மாதந்தோறும் சாய்பாபா பூஜை நடத்துவார். இந்த பூஜையில் சாய்பாபா பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவர் கே.கே.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் வைத்து, புதுச்சேரியைச்சேர்ந்த சபரிநாதன் (40), ராதா என்ற சுப்புலட்சுமி (43) ஆகியோரை சந்தித்தார். அவர்களும் தங்களை தீவிர சாய்பாபா பக்தர்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர். மோகன்நாத் வீட்டில் நடந்த சாய்பாபா பூஜையில் சபரிநாதனும், ராதாவும் கலந்து கொண்டனர்.

அப்போது திடீரென்று சாமி அருள் வந்து குறி சொல்வது போல, சபரிநாதன் நடித்தார். மோகன்நாத்தின் உறவினர்கள், அவருக்கு செய்வினை வைத்திருப்பதாகவும், அதனால் பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்றும் சபரிநாதன் சொன்னார். அதை உண்மை என்று நம்பிய மோகன்நாத் செய்வினை கோளாறை சரி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்று சபரிநாதனை கேட்டார்.

மாந்தீரிக பூஜை

அதற்கு மாந்திரீக பூஜை செய்தால் சரியாகிவிடும் என்று சபரிநாதன் கூறியதாக தெரிகிறது. அதற்கு மோகன் நாத் ஒப்புக்கொண்டார். பூஜையில் தங்க நகைகளை வைக்க வேண்டும் என்று சபரிநாதன் சொன்னார். அதை ஏற்று 15 பவுன் நகைகளை மோகன் நாத் கொடுத்தார். பூஜைக்கான செலவு என்று கொஞ்சம், கொஞ்சமாக ரூ.3 லட்சம் வரை சபரிநாதன், மோகன்நாத்திடம் கறந்து விட்டார்.

கே.கே.நகரில் தான் வசிப்பதாகவும், ராதா தனது சீடர் என்றும் சபரிநாதன் தெரிவித்தார். பல முறை பூஜை நடந்தது. பின்னர் மோகன் நாத் கொடுத்த 15 பவுன் நகைகளையும், தனது வீட்டில் நடக்கும் பூஜையில் வைத்துவிட்டு, திருப்பி தருவதாக சபரிநாதன் தெரிவித்தார். அதற்கும் மோகன்நாத் ஒப்புக்கொண்டார்.

தப்பி ஓட்டம்

ஆனால் சபரிநாதனும், அவரது தோழி ராதாவும் திடீரென்று காணாமல் போய் விட்டனர். கே.கே.நகரில் அவர்கள் வசித்த வாடகை வீடு பூட்டிக்கிடந்தது. செல்போனும் 'சுவிட்ச்ஆப்' ஆகி விட்டது. 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்தை சுருட்டிக்கொண்டு, சபரிநாதனும், ராதாவும் தப்பி ஓடியது தெரிய வந்தது. மேலும் சபரிநாதன் ஒரு போலி மந்திரவாதி என்றும், அவர் மீது புதுச்சேரியில் இதுபோல நிறைய பேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கு உள்ளதாகவும் தெரிய வந்தது.

இந்த தகவல்களை கேட்டு அதிர்ச்சி அடைந்த மோகன்நாத், தான் மோசம் போனது குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி, உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில், கே.கே.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதிரடி கைது

மோசடி மந்திரவாதி சபரிநாதன், அவரது சீடரும், தோழியுமான ராதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகைகளும், ரூ.60 ஆயிரமும் மீட்கப்பட்டது.

சபரிநாதன் மோசடி வழக்கில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருந்த போது, ராதாவை சந்தித்தார். விருதுநகரைச் சேர்ந்த ராதா வேறொரு வழக்கில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருந்தார். இருவரும் ஜாமீனில் வெளிவந்து ஒன்றாக சென்னை வந்து, கே.கே.நகரில் தங்கி, மோகன் நாத்தை தங்களது மோசடி வலையில் சிக்க வைத்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்