திருச்சி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
|வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வெளிநாட்டு வேலை
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில், திருச்சி பாலக்கரை மேலப்புதூர் பகுதியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனம் மூலம் குவைத் நாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக தலா ரூ.1 லட்சம் வீதம் அளித்தோம். ஆனால் எங்களுக்கு. வெளிநாட்டில் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும், நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். ஆகையால் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வீட்டுமனை பட்டா
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கத்தை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் அளித்த மனுவில், எங்களுக்கு கும்பக்குடி, வேலாயுதங்குடியில் கடந்த 2001, 2002-ம் ஆண்டுகளில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதன்பிறகு தமிழக அரசின் உதவித்தொகை மூலம் வீடுகட்டும் பணிகளும் தொடங்கின. ஆனால் பல்வேறு காரணங்களாலும், கொரோனா நோய்த்தொற்று காரணங்களாலும் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்தநிலையில் இந்த பட்டாக்களை கணினி பட்டாவாக மாற்றுவதற்கு திருவெறும்பூர் தாசில்தார் விசாரணை செய்து பட்டா தொடர்பான ஏதேனும் ஆவணம் கிடைக்காத பட்சத்தில் அதனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். எனவே, தமிழக அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்யாமல் அவை செல்லும் என அறிவித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 72). இவர் யாசகம் பெற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை சமூக நலப்பணிகளுக்கு அளித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்தில் தேவகோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் யாசகத்தின் மூலம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கினார்.
இது குறித்து பாண்டி கூறுகையில், 'கடந்த 2010-ம் ஆண்டு முதல் இதுவரை யாசகம் மூலம் கிடைத்த பணத்தில் பல லட்ச ரூபாயை சமூக நலப்பணிகளுக்கு அளித்துள்ளேன். நான் இதுவரை 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தேவையான மேஜை, நாற்காலி உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளேன்"என்றார்.