< Back
மாநில செய்திகள்
வீடு கட்டி தருவதாகபல லட்சம் ரூபாய் மோசடி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வீடு கட்டி தருவதாகபல லட்சம் ரூபாய் மோசடி

தினத்தந்தி
|
22 Jun 2023 6:36 PM GMT

புதுக்கோட்டையில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

கஜா புயல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு கஜா புயல் வீசியதில் பலர் தங்களது வீடுகளை இழந்தனர். இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு டிரஸ்ட் மூலமாக வீடு கட்டி தரப்படும் என்று கூறி கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சென்னையை சேர்ந்த ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர், கறம்பக்குடி, திருமயம், கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்துள்ளார். பின்னர் அவர்களிடம் வீடு கட்டி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூல் செய்து உள்ளார்.

ஆனால் இதுநாள் வரை அவர் வீடு கட்டி கொடுக்கவில்லை. 500-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

நடவடிக்கை இல்லை

பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், தங்களை மோசடி செய்து ஏமாற்றிய நபரை கைது செய்து அவரிடம் இருந்து தாங்கள் அளித்த பணத்தை திருப்பி பெற்று தருமாறு தெரிவித்துள்ளனர். புகார் மனுவை பெற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்