திருச்சி
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி
|திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருள் மாணிக்கராஜ் (வயது 39). இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஆசையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவரை அணுகிய திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ஷாஜகான் என்பவர், நான் உங்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பிய அருள்மாணிக்கராஜ் முதல் கட்டமாக ரூ.75 ஆயிரம் கொடுத்துள்ளார். இதேபோல் அருள்மாணிக்கராஜின் நண்பர்களான ரஞ்சித் குமார், அருள்ஜோரன், குமார் ஆகியோரும் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஆசையில் ஷாஜகானிடம் லட்ச கணக்கில் பணம் கொடுத்துள்ளனர்.
வழக்குப்பதிவு
ஆனால் ஷாஜகான் அவர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால் ஷாஜகான் கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருள்மாணிக்கராஜ் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாப்பா காலனியை சேர்ந்தவர் பாலு (47). இவரிடம் ஆன்லைன் மூலம் திருவாரூர் மாவட்டம் தில்லை வளாகம் தெற்கு காடு கிராமத்தை சேர்ந்த வேலரசன் மற்றும் வைரவேல் ஆகியோர் அறிமுகமாகி கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.
ரூ.12 லட்சம் மோசடி
இதனை நம்பிய பாலு, தனக்கும் தனது நண்பர்கள் 8 பேருக்கும் கனடாவில் வேலை வாங்கி தரக் கோரி ரூ.12 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் நாட்களை கடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து பாலு ஏமாற்றப்பட்டதை அறிந்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. இது குறித்து பாலு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியாவிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வேலரசன், வைரவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.