திருச்சி
ரூ.41 லட்சம் மோசடி; பெண் கைது
|ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி வழக்கில் ஏஜெண்டாக செயல்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி ரூ.41 லட்சம் மோசடி வழக்கில் ஏஜெண்டாக செயல்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் மின்வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேவசேனா (வயது 52). இவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே வி.என்.நகரை சேர்ந்த ரெஜினாபேகம் (48) என்பவர் அறிமுகமானார். இவர் தில்லைநகரில் ரியல்எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தி, சுகன்யா ஆகியோரை தேவசேனாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவர்கள் தேவசேனாவிடம் ரியல்எஸ்டேட் தொழிலில் ரூ.50 லட்சம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறி உள்ளார். உடனே உங்களுக்கு தெரிந்தவர்களிடம் வாங்கி கொடுத்தால் வட்டியுடன் பணத்தை கொடுத்துவிட்டு, மீதித்தொகையை நீங்கள் எடுத்து கொள்ளலாம் என்று கூறி உள்ளனர்.
பண மோசடி
இதை நம்பி தேவசேனா தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக ரூ.41 லட்சத்தை பல்வேறு தவணைகளில் கொடுத்தார். இதையடுத்து பணத்தை வாங்கி கொண்டு பிளாட்டிற்கு முன்பணம் தந்ததாக ரசீது கொடுத்துள்ளனர். 3 மாதங்களுக்கு பிறகு முதலீடு செய்த தொகைக்கு இரட்டிப்பு தொகைக்கு பிளாட் பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக கூறி விட்டு மோசடி செய்துவிட்டனர். இது குறித்து தேவசேனா கடந்த மாதம் 19-ந் தேதி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண் கைது
இன்ஸ்பெக்டர் கோசலைராமன் ரியல்எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த வி.என்.நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி சுகன்யா, நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், ஏஜெண்டாக இருந்த ரெஜினாபேகம் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார். இந்தநிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரெஜினாபேகத்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.