< Back
மாநில செய்திகள்
விதவைகள் உள்பட 3 பேரிடம் ரூ.4½ லட்சம் மோசடி
கடலூர்
மாநில செய்திகள்

விதவைகள் உள்பட 3 பேரிடம் ரூ.4½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
8 Nov 2022 7:44 PM GMT

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி விதவைகள் உள்பட 3 பேரிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

நெய்வேலி 30-வது வட்டம் ஜோதிதெருவை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி ரேவதி (வயது 36). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில், எனது கணவர் இறந்து விட்ட நிலையில், நான் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெய்வேலியில் சித்தாள் வேலை பார்த்த போது, அங்கு வேலை செய்து வந்த சிதம்பரம் மதுராந்தகநல்லூர் சரவணன் அறிமுகமானார்.

அவர் என்னிடம் தனது நண்பர் பிரபு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். அவர் பல அரசு அதிகாரிகளிடம் தொடர்பில் இருக்கிறார். ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு அரசு வேலை வாங்கி தருவார் என்று கூறினார். அதேபோல் உங்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவார் என்று கூறினார். இதை நம்பி நான் அவர்கள் 2 பேரிடமும் கொஞ்சம், கொஞ்சமாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் வழங்கினேன்.

மோசடி

பின்னர் அவர்கள் வேறு யாராவது விதவை பெண்கள் இருந்தால் சொல்லுங்கள். அவர்களுக்கும் அரசு வேலை வாங்கி தருகிறேன் என்றார். இதனால் என்னை போலவே விதவை பெண்ணான மணிகண்டன் மனைவி மலர்விழி ரூ.1½ லட்சம், அவருக்கு தெரிந்த நெய்வேலி கலைஞர் நகர் மாற்றுத்திறனாளி செல்வம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் வேலை வாங்கி தராமல் எங்கள் பணத்தை மோசடி செய்து விட்டனர். ஆகவே அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு இது பற்றி விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுராந்தகநல்லூர் சேகர் மகன் சரவணன் (33), வரக்கால்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருள் மகன் பிரபு (35) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், அவர்கள் 3 பேரிடம் பணத்தை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சரவணன், பிரபு மீது ஏற்கனவே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் 3 மோசடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்