திருச்சி
பெண்ணிடம் நிலம் விற்று ரூ.82 லட்சம் மோசடி
|திருச்சியில், போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் நிலம் விற்று ரூ.82 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில், போலி ஆவணம் தயாரித்து பெண்ணிடம் நிலம் விற்று ரூ.82 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
நிலம் விற்பனை
திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலையை சேர்ந்தவர் கவிதா (வயது 55). இவருடைய கணவர் பரமேஸ்வரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கவிதா கடந்த 2007-ம் ஆண்டு கே.சாத்தனூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் டேனியல் ஜூலியஸ்ராஜ் என்பவரை அணுகி வீட்டுமனை விலைக்கு வாங்கி தரும்படி கூறினார்.
இதையடுத்து கவிதாவை அழைத்து சென்று, களமாவூர் மற்றும் மாத்தூரில் 2 காலிமனைகளை டேனியல் காண்பித்தார். அந்த 2 இடங்களும் பிடித்து இருந்ததால் கவிதா முன்பணம் கொடுத்தார்.
பின்னர் மாத்தூர் இடத்தை கவிதாவின் பெயரில் பத்திரப்பதிவு செய்து விட்டதாக டேனியல் ஜூலியஸ்ராஜ் கவிதாவிடம் கூறி, மீதித்தொகையை பெற்றுக் கொண்டார்.
சில நாட்களுக்கு பிறகு, மாத்தூர் இடத்துக்கான பத்திரத்தை கேட்டபோது, மாத்தூர் இடத்தை பத்திரம் செய்ய முடியவில்லை என்றும், அதற்கு பதிலாக சூரியூர் அருகே பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஒரு இடத்தை திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் டேனியல் ஜூலியஸ்ராஜ் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.
ரூ.82 லட்சம் மோசடி
கடந்த 2008-ம் ஆண்டு அந்த இடத்துக்கு பட்டா கேட்டு சூரியூர் கிராம நிர்வாக அலுவலரை கவிதா அணுகினார். அப்போது, அந்த இடம் குட்டை புறம்போக்கு என தெரியவந்தது. இதையடுத்து கவிதா மீண்டும் டேனியல் ஜூலியஸ்ராஜிடம் முறையிட்டார். அதற்கு அவர், சாத்தனூர் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான 6 ஆயிரம் சதுரடியை வாங்கி தருவதாக கூறி கவிதாவிடம் இருந்து மேலும் பல லட்சத்தை டேனியேல் ஜூலியஸ்ராஜ் வாங்கி கொண்டார்.
பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து கவிதா பெயரில் 6 ஆயிரம் சதுரடி இடத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். அந்த இடத்தை வாங்கியபிறகு, அதற்கான பட்டா வாங்குவதற்காக கவிதா பாலக்கரையில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகம் சென்று கேட்டபோது, அந்த இடம் வேறொரு நபருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனால் தன்னிடம் மொத்தமாக மோசடி செய்த ரூ.82 லட்சத்து 21 ஆயிரத்தை திரும்ப தருமாறு டேனியல் ஜூலியஸ்ராஜிடம் கவிதா கேட்டார்.
ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது
ஆனால் பணத்தை தராமல் டேனியல் ஜூலியஸ்ராஜ் இழுத்தடித்து வந்தார். இதையடுத்து கவிதா கடந்த 2021-ம் ஆண்டு திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த டேனியல் ஜூலியஸ்ராஜை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் கைது செய்தார். மேலும், டேனியலுக்கு உடந்தையாக இதில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-------