திருப்பத்தூர்
பகுதி நேர வேலை தருவதாக ரூ.5 லட்சம் மோசடி
|பகுதி நேர வேலை தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
பகுதி நேர வேலை
திருப்பத்தூரை சேர்ந்த சையத் சாதிக் என்பவருக்கு சமூக வலைதளத்தில் இருந்து கடந்த 9-ந்தேதி பகுதி நேர வேலை உள்ளதாகவும், அதன் மூலம் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்துள்ளது.
இதனை நம்பிய அவர் குறுந்தகவலில் இருந்த லிங்கிள் சென்று தனது சுயவிவரங்கள், வங்கி கணக்குகளை கொடுத்துள்ளனர். அதன்பின் அவரது செல்போனுக்கு ஒரு 'டாஸ்க்' வந்துள்ளது. அதில் இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் தரங்கள் குறித்து ஸ்டார் மதிப்பெண்கள் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடுத்தால் பணம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
மோசடி
அந்த டாஸ்கின்படி சையத் சாதிக் மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர். அதன்பிறகு சமூக வலைதளம் மூலம் ஒரு லிங்கை அனுப்பி அதில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய சையத் சாதிக் பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 888 செலுத்தி உள்ளார். பின்னர் கூடுதல் பணம் வரவில்லை என அவர் அந்த நபர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள் முறையாக பதில் கூறவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சையத் சாதிக் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.