சென்னை
குத்தகைக்கு விடுவதாக ஒரே வீட்டை காட்டி 7 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி: தாய்-மகன் கைது
|குத்தகைக்கு விடுவதாக ஒரே வீட்டை காட்டி 7 பேரிடம் ரூ.36 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்த தாய்-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர் அம்பிகா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவர், தன்னுடைய மனைவி, கை குழந்தை மற்றும் வயதான மாமியார், மாமனார் ஆகியோருடன் வசித்து வருகிறார். தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் இவர், குத்தகைக்கு வீடு பார்த்து செல்ல முடிவு செய்தார்.
இதற்காக ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்து, அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணில் கோபி மகாராஜா என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியபடி கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 13-வது தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு மணிகண்டன் நேரில் சென்றார்.
அந்த வீட்டில் கோபி மகாராஜா மற்றும் அவருடைய மனைவி அம்பிகா (43), அவர்களுடைய மகன் பிரவீன்ராஜ் (19) உள்ளிட்டோர் இருந்தனர். அவர்கள், மணிகண்டனிடம் முத்தமிழ்நகர் 3-வது தெரு, காவேரி சாலையில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீட்டை ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு விடுவதாக கூறினர். அதற்கு சம்மதம் தெரிவித்த மணிகண்டன், முன்பணமாக ரூ.2 லட்சத்தை பேசி, அதில் ரூ.1 லட்சம் காசோலையாகவும், மீதி ரூ.1 லட்சத்தை பணமாகவும் கடந்த நவம்பர் மாதம் கொடுத்தார்.
ஆனால் அவர்கள் சொன்னபடி மணிகண்டனிடம் அந்த வீட்டை ஒப்படைக்கவில்லை. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி அவர்களது வீட்டுக்கு சென்று மணிகண்டன் கேட்டார்.
அப்போது வீட்டில் இருந்த கோபி மகாராஜா கத்தி மற்றும் துப்பாக்கியை காண்பித்து மணிகண்டனையும் , அவருடன் சென்றவரையும் மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மணிகண்டனிடம் குத்தகைக்கு தருவதாக கூறி பணம் வாங்கிய வீடு கோபி மகாராஜாவுக்கு சொந்தமான வீடு இல்லை என்பதும், அவருடன் வீட்டில் இருந்தது அவரது மனைவி மற்றும் மகன் இல்லை என்பதும் தெரியவந்தது.
கோபி மகாராஜா, குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து ஆன்லைனில் விளம்பரம் செய்து, கோவிலம்பாக்கம் நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் (42) என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து, தனது வீடு எனக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததும், இதற்கு அம்பிகா, அவருடைய மகன் பிரவீன்ராஜ் மற்றும் வீட்டின் உரிமையாளர் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அம்பிகா, பிரவீன்ராஜ், குமார் ஆகிய 3 பேரையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்.
அத்துடன் மணிகண்டனை மிரட்டியது உண்மையான துப்பாக்கி இல்லை என்பதும், அது துப்பாக்கி வடிவிலான சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் குறிப்பிட்ட இந்த ஒரு வீட்டையே 7-க்கும் மேற்பட்டோரிடம் காண்பித்து குத்தகைக்கு கொடுப்பதாக கூறி ரூ.36 லட்சத்துக்கும் மேலாக மோசடி செய்ததும் தெரியவந்தது.
கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கோபி மகாராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.