விழுப்புரம்
10 பேரிடம் ரூ.33 லட்சம் மோசடி
|தனியார் கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக தொகை கிடைக்கும் என்று கூறி 10 பேரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தனர்.
விழுப்புரம்:
மரக்காணம் தாலுகா ஆடவல்லிக்கூத்தான் கிராமத்தை சேர்ந்த நாகராஜ், சாத்தமங்கலம் சரவணன், முருக்கேரி செந்தில்குமார், சுபஹாகான், வைடப்பாக்கம் மதுரைவீரன், மொளசூர் ரத்தினம், நல்லூர் வெங்கடேஷ், வடநெற்குணம் பாஸ்கர், செட்டிக்குளம் எல்லப்பன், நகர் அய்யனார் ஆகியோர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவர் பழக்கமானார். அவர், தனியார் கம்பெனியில் வேலை செய்வதாகவும், அந்த கம்பெனியில் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் பங்கு தொகை கிடைக்கும் என்றும், நீங்கள் கட்டும் பணத்திற்கு உத்தரவாத பத்திரம் தருவதாகவும் எங்களிடம் கூறினார்.
இதை நம்பிய நாங்கள் 10 பேரும் மொத்தம் ரூ.33 லட்சத்தை அவரிடம் கொடுத்தோம்.
10 பேரிடம் ரூ.33 லட்சம் மோசடி
பணம் பெற்ற ஒரு சில மாதங்கள் மட்டும் எங்களுக்கு பங்கு தொகையை கொடுத்தார். அதன் பிறகு அத்தொகையை கொடுக்காமல் எங்களை அலைக்கழித்தார். இதனால் நாங்கள் அனைவரும் முருகதாசை சந்தித்து, தாங்கள் கொடுத்த ரூ.33 லட்சத்தை தரும்படி கேட்டோம். அதற்கு சில மாதங்களில் தருவதாக கூறினார்.
பின்னர் மரக்காணம் தாலுகா சிங்கநந்தல் கிராமத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்து கொள்ளுமாறு ஒரிஜினல் பத்திரத்தை எங்களிடம் கொடுத்தார். அந்த நிலத்தை வாங்க ஒருவரை தயார் செய்து வைத்து முருகதாசை பதிவு செய்ய அழைத்தபோது நிலத்தை விற்க முடியாது என்றும், பணத்தை திருப்பித்தரும்படி கேட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுக்கிறார். எனவே எங்களை ஏமாற்றி பணம் மோசடி செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.