< Back
மாநில செய்திகள்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
27 Sep 2022 6:45 PM GMT

நிதி நிறுவனம் நடத்தி ரூ.25 லட்சம் மோசடி பாதிக்கப்பட்ட மக்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா சிறுவாடி கிராம மக்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த செய்யதுஅலி, அழகியமண்டபம் பகுதி ஜெயசசிதரன், எட்வின்சுதாகர், மார்த்தாண்டம் ரமேஷ் உள்ளிட்ட சிலர் எங்களிடம் வந்து தாங்கள் நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிளை அலுவலகங்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களில் இயக்குனர்கள், முக்கிய ஏஜெண்டுகள் என்றும், எங்கள் நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து திட்டங்களில் முதலீடு செய்தால் வங்கிகளை விட அதிக வட்டி தருவதாகவும், முதலீட்டு தொகை எப்போது தேவைப்பட்டாலும் திருப்பித் தருவதாகவும், இந்த தொகையை வீட்டுமனைகளில் முதலீடு செய்வதாகவும் கூறினர். இதை நம்பிய நாங்கள் 50-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்து மாதந்தோறும் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தினோம். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பிறகும் அந்நிறுவனத்தினர் நாங்கள் செலுத்திய பணத்தை வட்டியுடன் திருப்பித்தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். நாங்கள் பலமுறை வற்புறுத்தி கேட்டும் அவர்கள் பணத்தை தராததால் நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றபோது அவர்கள் அந்நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். எனவே எங்களிடம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்த அந்நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்