திருச்சி
டீக்கடை நடத்தி லாபம் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி
|டீக்கடை நடத்தி லாபம் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சியை அடுத்த மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 44). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்திருந்தார். இவருக்கும், உறையூர் லிங்கநகரை சோந்த பால்வியாபாரி கிருஷ்ணகுமாருக்கும் (29) ஏற்கனவே பழக்கம் இருந்தது. கிருஷ்ணகுமார் குமரவேலிடம் ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு டீக்கடை ரூ.34 லட்சத்துக்கு விற்பனைக்கு வருவதாகவும், இருவரும் தலா ரூ.17 லட்சம் வீதம் செலுத்தி அந்த கடையை எடுத்து நடத்தினால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறி உள்ளார்.அதன்பின்னர் சில மாதங்கள் கழித்து கிருஷ்ணகுமார் தனது தாய், மனைவி மற்றும் சகோதரியுடன் சேர்ந்து மீண்டும் குமரவேலை சந்தித்தார். அப்போது தங்களிடம் ரூ.17 லட்சம் முதலீடு செய்ய தற்போது பணம் இல்லை என்றும், ரூ.25 லட்சம் கொடுத்தால் அதற்குரிய லாபத்தை சேர்த்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து குமரவேல் வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்த பணத்தை கடந்த 2019-ம் ஆண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.அதன்பிறகு டீக்கடையை எடுத்து நடத்தி வந்த கிருஷ்ணகுமார் கொரோனா கால லாக்டவுன் காரணத்தை கூறி குமரவேலுக்கு லாபத்தொகையை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். ஆனால் தற்போதுவரை எந்த தொகையும் கொடுக்காததால் ஏமாற்றம் அடைந்த குமரவேல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கிருஷ்ணகுமார், அவரது தாய், மனைவி மற்றும் சகோதரி மீது வழக்குப்பதிந்த போலீசார், கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.