< Back
மாநில செய்திகள்
பேராசிரியரிடம் ரூ.23½ லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

பேராசிரியரிடம் ரூ.23½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
2 Dec 2022 8:31 PM GMT

பேராசிரியரிடம் ரூ.23½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் நவாஸ் (வயது 47). கணினி அறிவியலில் பி.எச்.டி. முடித்துள்ள இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். பின்னர் கொரோனா தொற்று பிரச்சினையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.

தற்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்பிய அவர், இணையதளங்களில் வேலை வாய்ப்பை தேடி வந்தார். அப்போது ஒரு இணையதளத்தில் தனது சுய விவரத்தை அனுப்பி வைத்திருந்தார்.

ரூ.23½ லட்சம் அனுப்பினார்

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், இணையதளம் வாயிலாக வேலைக்கு விண்ணப்பித்த பேராசிரியர் பிரேம் நவாசிடம், அவருக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ரூ.6 லட்சம் மாத சம்பளத்தில் பேராசிரியர் பணி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய பிரேம் நவாஸ் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் அந்த மர்ம நபர்கள் செல்போன் மூலம் பிரேம் நவாசை தொடர்பு கொண்டு பதிவு கட்டணம், என்.ஓ.சி. பணி நியமன செலவினம் என பல்வேறு காரணங்களை கூறி லட்சக்கணக்கில் பணம் கேட்டனர். இதையடுத்து அந்த நபர்கள் கூறியபடி ரூ.23 லட்சத்து 53 ஆயிரத்து 228-ஐ, அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளில் பிரேம் நவாஸ் அனுப்பினார்.

வலைவீச்சு

ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவருக்கு பணி நியமன ஆணை வந்து சேரவில்லை. பின்னர் அந்த நபர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரேம் நவாஸ், இது குறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஆன்லைனில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து பேராசிரியரை ஏமாற்றிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்