< Back
மாநில செய்திகள்
கடலூரில்ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடிஅங்கன்வாடி ஊழியர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில்ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடிஅங்கன்வாடி ஊழியர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார்

தினத்தந்தி
|
11 May 2023 6:45 PM GMT

கடலூரில், ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த அங்கன்வாடி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

புகார் மனு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட நிர்வாகி கருப்பையன், மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் முன்னிலையில் வண்டிப்பாளையத்தை சேர்ந்த வைரமணி மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து மனு அளித்தனர்.

இதில் வைரமணி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஏலச்சீட்டு

வைரமணியான நான் கடலூரில் உள்ள ஒரு நகைக்கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் கடந்த ஆண்டு கடலூரை சேர்ந்த அங்கன்வாடி பெண் ஊழியர், அவரது குடும்பத்தினர் அணுகி ஏலச்சீட்டு நடத்துவதாகவும், அதில் மற்ற ஊழியர்களை சேர்த்து விடுமாறும் கூறினர்.

அதன்பேரில் நான் 54 பேரை சேர்த்து விட்டேன். அதன்படி அவர் நேரில் வந்து முதல் தவணை ஏலச்சீட்டு பணத்தை பெற்று சென்றார். சீட்டு பணத்தையும் அவரே வந்து கொடுத்து விட்டு சென்றார். பின்னர் அவரது மகள் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பி வந்தோம். பிறகு அவரது மகன்களும் சீட்டு பணத்தை வசூல் செய்தனர்.

ரூ.20 லட்சம்

ஆனால் சீட்டு விழுந்த நபர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். மொத்தம் ரூ.20 லட்சத்து 16 ஆயிரம் தர வேண்டும். இது பற்றி அங்கன்வாடி ஊழியரிடம் கேட்டதற்கு, எங்களை திட்டி மிரட்டி வருகிறார்.

இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் மனு அளித்தும், பணத்தை பெற்று தர நடவடிக்கை இல்லை. ஆகவே எங்கள் பணத்தை மோசடி செய்த அவர் மீதும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பாதிக்கப்பட்ட நபர்கள் தனித்தனியாக மனு அளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்