< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2¾ லட்சம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2¾ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
5 April 2023 6:45 PM GMT

விழுப்புரம் அருகே என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2¾ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே சிறுவந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 28), என்ஜினீயர். இவரை கடந்த 2-ந் தேதியன்று பகுதி நேர வேலை எனக்கூறி டெலிகிராம் ஐடி மூலம் தொடர்புகொண்டு ஒருவர் பேசினார். அப்போது அந்த நபர், சந்தோசிடம் உங்களுக்கு யூ-டியூப் மூலம் அனுப்பும் வீடியோவை பார்த்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் ரூ.50 தரப்படும் எனக் கூறியுள்ளார்.

அதன்படி சந்தோஷ், அந்த நபர் அனுப்பிய 3 வீடியோக்களை பார்த்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்ததற்கு ரூ.150-ஐ பெற்றார். அதன் பிறகு டெலிகிராம் ஐடி மூலம் சந்தோஷை தொடர்புகொண்ட நபர், ஒரு லிங்கை அனுப்பியதன்பேரில் அந்த லிங்கிற்குள் சென்று தனக்கென உள்நுழைவு முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தார்.

ரூ.2.83 லட்சம் மோசடி

பின்னர் அந்த நபர், சந்தோசிடம் சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய சந்தோஷ், தனது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பேடிஎம் மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கியின் கணக்குகளுக்கு 5 தவணைகளாக ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த நபர் கூறியபடி டாஸ்க் முடித்த பின்னரும் சந்தோசுக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார். இதுகுறித்து சந்தோஷ், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்