< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
14 Dec 2022 6:13 PM GMT

திருச்சி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பட்டதாரி பெண்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த ஜெய் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவரது மனைவி இந்துமீனா (28). பட்டதாரியான இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பினார்.

இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தனது நண்பர்கள் சிலர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வருவதாக தெரிவித்தார். மேலும் அவரது நண்பர்களான புதுச்சேரியை சேர்ந்த கிஷோர், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த பிரபாகரன் ஆகியோரை இந்து மீனாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மோசடி

அதன் பின் வினோத், கிஷோர், பிரபாகரன் ஆகியோர் சேர்ந்து அயர்லாந்து நாட்டில் வேலை உள்ளதாகவும், பல லட்சம் சம்பளம் கிடைக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறிஉள்ளனர். இதனையடுத்து இந்து மீனா வெளிநாட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு ரூ.19 லட்சத்தை பல்வேறு தவணைகளாக கொடுத்துள்ளார்.

ஆனால் ஒருவருடத்துக்கு மேலாகியும் அவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை. இதனையடுத்து அவர் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த இந்துமீனா திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சிறையில் அடைப்பு

அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் 3 பேரும் புதுச்சேரியில் ஒருவரிடம் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வினோத், கிஷோர், பிரபாகரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்