திருச்சி
மூதாட்டியின் வீட்டை அடமானம் வைத்துரூ.19 லட்சம் மோசடி
|மூதாட்டியின் வீட்டை அடமானம் வைத்துரூ.19 லட்சம் மோசடி செய்த ௪ பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி காட்டூர் கோகுல் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 70). இவர் தனது வீட்டு தேவைகளுக்காக திருச்சியில் உள்ள ஒரு வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வயது முதிர்வு காரணமாக கடன் வழங்க வங்கி நிர்வாகம் மறுத்து விட்டது.
இந்த நிலையில் திருச்சி அண்ணா சிலை பூசாரி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அந்த மூதாட்டியை அணுகி திருச்சி சிந்தாமணி காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரராஜ் (38) என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் மகேந்திரராஜ் அந்த மூதாட்டியின் வீட்டை ரூ.38 லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளார். அதில் கடனுக்காக தவணை கட்டுவதாக கூறி ரூ.19 லட்சத்தை மகேந்திரராஜ் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் அந்த தொகையை மகேந்திரராஜ், அமிர்தராஜன் ஆகியோர் பங்கு போட்டுக்கொண்டு வங்கி கடன் தவணையை கட்டாமல் மோசடி செய்து விட்டனர்.
இதையடுத்து சுப்புலட்சுமி, திருச்சி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் மகேந்திரராஜ், ராஜேந்திரன், மேலும் மோசடிக்கு உடந்தையாக இருந்த சிவராஜன், அமிர்தராஜன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.