< Back
மாநில செய்திகள்
பேரம்பாக்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பேரம்பாக்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
9 Feb 2023 1:34 PM IST

பேரம்பாக்கத்தில் இன்சூரன்ஸ் பணம் பெற்றுதருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜாத்தி (வயது 48). இவரது கணவர் ஸ்ரீ ராமன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இதை தொடர்ந்து ராஜாத்தியை போன் மூலம் தொடர்பு கொண்ட பேரம்பாக்கம் அருகே உள்ள மேட்டுக் கண்டிகை பகுதியை சேர்ந்த காமேஷ் என்பவர் தனது நண்பர்கள் ரவி, சுகுனேசன், வேழவேந்தன் ஆகியோருடன் சேர்ந்து இறந்த உங்களது கணவர் பெயரில் ரூ. 50 லட்சம் காப்பீட்டுத் தொகை வந்துள்ளதாக கூறினார். அந்த தொகையை பெற வேண்டும் என்றால் ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ் புத்தகம் போன்றவற்றை வாட்ஸ் ஆப் மூலம் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார்.

இதை உண்மை என்று நம்பிய ராஜாத்தி மேற்கண்ட ஆவணங்களை அவர்களுக்கு வாட்ஸ்- ஆப் மூலம் அனுப்பினார். மேலும் இந்த காப்பீட்டு தொகையை பெற தங்களுக்கு பணம் தர வேண்டும் என காமேஷ் மற்றும் அவரது நண்பர்களான ரவி, சுகுனேசன், வேழவேந்தன் ஆகியோர் தெரிவித்தனர். இதையடுத்து ராஜாத்தி ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை 3 தவணையாக அனுப்பினார்.

அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபர்கள் ராஜாத்தியை தொடர்பு கொள்ளாமல் விட்டனர். இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜாத்தி மேற்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் பணத்தை திருப்பி தர முடியாது என மறுப்பு தெரிவித்து பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதுகுறித்து ராஜாத்தி மப்பேடு போலீஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் ராஜாத்தியிடம் மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருக்கும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்