திருவள்ளூர்
பள்ளிப்பட்டு அருகே பட்டா வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி
|பள்ளிப்பட்டு அருகே பட்டா வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
ரூ.1½ லட்சம் பெற்றுக்கொண்டார்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேல் நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி நாயுடு. இவரது மனைவி நாகம்மாள் (வயது 49). இவருக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதை தெரிந்து கொண்ட பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பழைய காலனியை சேர்ந்த நாகராஜன் (39) என்பவர் நாகம்மாளிடம் சென்று உன் அனுபவத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்திற்கு நான் பட்டா வாங்கி தருகிறேன் நான் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன் என்று கூறி அவரிடம் இருந்து ரூ.1½ லட்சத்தை பெற்றுக் கொண்டார்.
கைது
இது நாள் வரை அவர் பட்டா எதுவும் வாங்கி தராததால் நாகம்மாள் தனது தம்பி நாகபூஷனம் என்பவருடன் சேர்ந்து சில நாட்களுக்கு முன்னர் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜன் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்வதாக மிரட்டியதாகவும் மேலும் நாகம்மாளின் தலை முடியை பிடித்து இழுத்து அவரை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நாகம்மாள் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். இது குறித்து பள்ளிப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் இந்த புகாரில் குற்றம் சாட்டப்பட்ட நாகராஜன் ஏற்கனவே பள்ளிப்பட்டு தாலுகா அலுவலக ஊழியர்களை கொலை செய்வதாக மிரட்டிய வழக்கில் 2 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது திருத்தணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.