ஈரோடு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி; போலி பணி நியமன ஆணை வழங்கிய வியாபாரி கைது
|மொடக்குறிச்சி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி 5 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி 5 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
வியாபாரி
மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சைஊத்துக்குளியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). மாற்றுத்திறனாளியான இவர் சர்க்கரை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை கந்தவேல் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (42) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
5 பேரிடம்...
இந்த நிலையில் இவரிடம் பாலமுருகன் வருவாய்த்துறையில் டிரைவர் பணி காலியாக இருப்பதாகவும், அதனை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்றும், அதற்கு நீங்கள் ரூ.2 லட்சம் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அதனை நம்பி அவர் பாலமுருகனிடம் ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளார்.
மேலும் செல்வராஜ் மூலம் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு தெருவை சேர்ந்த ஞானசெல்வம் (33), திருவண்ணாமலை மாவட்டம் மலைப்பாம்படி ஆலமர தெருவை சேர்ந்த பிரசாந்த் (33), தென்காசி மாவட்டம் அருணகிரிபுரம் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அசோக்குமார் (26), தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வடகாந்த குளம் பகுதியைச் சேர்ந்த வீரபுத்திரன் (36) ஆகிய 4 பேரும் அறிமுகமாகியுள்ளனர்.
மோசடி
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரிடமும் பாலமுருகன் வருவாய்த்துறையில் டிரைவர் பணி வாங்கி தருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் தலா ரூ.2 லட்சம் என ரூ.8 லட்சம் பெற்றுள்ளார். செல்வராஜ், ஞானசெல்வம், பிரசாந்த், அசோக்குமார், வீரபுத்திரன் ஆகிய 5 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் கடந்த மாதம் இவர்கள் 5 பேருக்கும் பாலமுருகன் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். ஆனால் அது போலியானது என தெரியவந்துள்ளது.
இதையடுத்து 5 பேரும் பணத்தை திருப்பி தருமாறு பாலமுருகனின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 5 பேரும் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் போலி சீல் மற்றும் நியமன ஆணை படிவங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.