< Back
மாநில செய்திகள்
குடந்தை வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

குடந்தை வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
24 March 2023 8:06 PM GMT

குடந்தை வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி குடந்தை வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த திருப்பூர் பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டில் வேலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் வங்கி சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பெண் ஒருவர் பேசினார். அப்போது தான் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் அறிமுகமானவர்கள் என்பது தெரியவந்தது.

அந்த நேரத்தில் தனது தங்கையின் கணவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்குவதற்காக அந்த வாலிபர் முயற்சி செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த அந்த பெண், நீங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை வெளிநாட்டில் உள்ளது.

உங்களுக்கு அந்த வேலை வேண்டுமென்றால் உங்களுக்கு விசா தயார் செய்து வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப வேண்டியது எனது பொறுப்பு என குறிப்பிடப்பட்ட குறுந்தகவலை அந்த வாலிபரின் 'வாட்ஸ்-அப்' எண்ணிற்கு அனுப்பி வைத்தார்.

போலீசில் புகார்

இதை படித்து பார்த்த அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் பேசியபோது, வெளிநாட்டில் வேலை வாங்கி விடலாம் என அவரை நம்ப வைத்து விண்ணப்பம் அளிக்க வைத்தார். மேலும் விசா மற்றும் இதர கட்டணத்திற்காக அந்த பெண் கூறிய வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை 3 தவணைகளில் செலுத்தினார். ஆனால் நாட்கள் கடந்து சென்றதே தவிர வெளிநாட்டு வேலையும் கிடைக்கவில்லை. வேலைக்காக கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர், அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த அந்த வாலிபர் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட வாலிபர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் செல்போன் கோபுர ஏரியா ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர்.

பெண் கைது

அப்போது அந்த பெண் முதலில் சென்னையில் இருப்பதும், பின்னர் கோவையில் இருப்பதும் தெரிய வந்தது. உடனே சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு விரைந்து சென்றனர்.

அங்கு ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது அவர் திருப்பூரை சேர்ந்த தீபிகா(வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து தீபிகாவை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 3 சிம்கார்டுகள், பான்கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் அவரை தஞ்சைக்கு அழைத்து வந்து தஞ்சை முதலாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

தீபிகாவை அடுத்த மாதம்(ஏப்ரல்) 5-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தீபிகாவை போலீசார் திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்