< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
31 July 2022 4:37 PM GMT

குலுக்கலில் கார் பரிசு விழுந்துள்ளதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

விழுப்புரம்

கார் பரிசு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா கொடுக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் 21 வயதுடைய பெண் இவர் மீசோ என்ற செல்போன் செயலியில் ரூ.153-க்கு ஒரு மொபைல் பவுச்சை ஆர்டர் செய்திருந்தார்.

பின்னர் ஓரிரு நாட்கள் கழித்து அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், தான் மீசோ நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி எங்கள் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி நடந்த குலுக்கலில் உங்களுக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாகவும், இந்த பரிசை பெறுவதற்கான நிபந்தனை விவரங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

ரூ.1.63 லட்சம் மோசடி

மேலும் அந்த நபர், இதற்காக ஒரு சதவீத முன்பணம், ஜி.எஸ்.டி., கமிஷன் தொகை ஆகியவற்றுக்காக பணம் கட்ட வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய அவர், அந்த நபர் கூறிய வங்கிகளின் கணக்குகளுக்கு தன்னுடைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலம் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்தை 15 தவணைகளாக அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர், அந்த பெண்ணுக்கு பரிசு ஏதும் அனுப்பாமலும், பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்