வாடகைக்கு வீடு தருவதாக கூறி போலீஸ்காரரிடம் ரூ.1 லட்சம் மோசடி; தலைமறைவானவர் கைது
|வெறொருவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு தருவதாக கூறி போலீஸ்காரரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்து விட்டு, தலைமறைவானவர் 7 ஆண்டுகளுக்கு பின்னர் கைதானார்.
ஆவடி,
திருவள்ளூர் நேதாஜி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் வேலு (வயது 47). இவர் திருவள்ளூர் மாவட்டம் கியூ பிரான்ஞ் பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஊட்டி குன்னூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்ற ஸ்ரீராம் (47) என்பவர் அறிமுகமானார்.
அப்போது திருவள்ளூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தான் சொந்த வீட்டில் வசித்து வருவதாக கூறிய ஜெகதீஷ், அந்த வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி வேலுவிடம் ரூ.1 லட்சத்தை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வேலு, ஜெகதீஷ் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரித்த போது, அந்த வீட்டில் அவர் வாடகைக்கு இருந்து வந்ததும், மோசடி செய்து தன்னிடம் பணத்தை ஏமாற்றியதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து வேலு அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது, ஜெகதீஷ் பணத்தை தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் வேலு புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 2016-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த ஜெகதீசை தேடி வந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா தலைமையில், திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினார். விசாரணையின் பேரில் தலைமறைவாக இருந்த ஜெகதீஷ் என்ற ஸ்ரீராமை சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா நேற்று முன்தினம் அதிரடியாக மடக்கி பிடித்தார். பின்னர் ஜெகதீஷை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தார்.
மோசடி அம்பலம்
விசாரணையில், ஜெகதீஷ் வேலுவிடம் தனது சொந்த வீடு என்று கூறி ரூ.1 லட்சம் பணத்தை ஏமாற்றியதும், அதேபோல் பம்மல், கொளத்தூர், புழல், திருப்பூர், கோவை, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம், நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டிருப்பதும் அம்பலமானது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.