< Back
மாநில செய்திகள்
மடிப்பாக்கத்தில் வழக்கை நடத்துவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி; போலி வக்கீல் கைது
சென்னை
மாநில செய்திகள்

மடிப்பாக்கத்தில் வழக்கை நடத்துவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி; போலி வக்கீல் கைது

தினத்தந்தி
|
13 Feb 2023 12:22 PM IST

மடிப்பாக்கத்தில் வழக்கை நடத்துவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்த போலி வக்கீலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருத்திகா தேவி. இவருடைய தாத்தா வழி சொத்து தொடர்பான வழக்கு கோவை கோர்ட்டில் நடந்து வருகிறது. கீழ்கட்டளை அம்பாள் நகரை சேர்ந்த பிரதாப் (வயது 30) என்பவர் தான் ஒரு வக்கீல் எனவும், இந்த வழக்கை நடத்தி தருவதாகவும் கூறி கிருத்திகா தேவியிடம் ரூ.1½ லட்சம் பெற்றார்.

ஆனால் அதன்பிறகு வழக்கு தொடர்பாக கேட்டால் எதுவும் சொல்லாமல் இருந்து உள்ளார். இதனால் கிருத்திகா தேவி, தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு பிரதாப், கிருத்திகா தேவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பிரதாப் வக்கீல் என்று கூறியது உண்மையா? என்பதை சரிபார்க்க மடிப்பாக்கம் போலீசார் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு தகவலை அனுப்பி கேட்டனர். அதில் இதுவரை யாரும் இந்த பெயர் மற்றும் முகவரியில் பார் கவுன்சிலில் பதிவு செய்யவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வக்கீல் போல் நடித்து வழக்கை நடத்தி தருவதாக பெண்ணிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த போலி வக்கீல் பிரதாப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்