< Back
மாநில செய்திகள்
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி: பொன்மகள் நிறுவனத்தின் மீது வழக்கு
திருச்சி
மாநில செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி: பொன்மகள் நிறுவனத்தின் மீது வழக்கு

தினத்தந்தி
|
4 Sep 2023 7:44 PM GMT

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட பொன்மகள் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட பொன்மகள் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தங்க மகள் சேமிப்புத் திட்டம்

திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த கண்ணன், அவரது மனைவி சுபா ஆகியோர் சேர்ந்து பாலக்கரை எடத்தெரு, கீழகள்ளுக்காரத்தெருவில் பொன்மகள் எண்டர்பிரைசஸ் என்ற ஏலச்சீட்டு மற்றும் பர்னிச்சர் கடை கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரிடம் தாங்கள் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் என தங்க மகள் சேமிப்புத் திட்டம் நடத்தி வருவதாகவும், அந்த திட்டங்களில் சேர்ந்து முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறினர்.

ரூ.1 கோடி மோசடி

இதனை நம்பிய சுந்தர்ராஜ் தனது பெயரிலும், தனது மகன்கள் பெயரிலும் 4 சீட்டுகளில் சேர்ந்து மொத்தம் ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 750 கட்டியுள்ளார். இதில் கடந்த ஆண்டு பொன் மகள் ஏலச்சீட்டு நடத்தி வந்த கண்ணன் என்பவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் முதலீடு பெற்று பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி உள்ளனர். இதையடுத்து சுந்தர்ராஜ் மோசடி செய்த பொன்மகள் நிறுவனத்தின் மீதும், அதனை நடத்தி வந்த கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுத்து தனக்கு கிடைக்க வேண்டிய ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 750 கிடைக்க ஆவண செய்யுமாறு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசிடம் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார் தெரிவிக்கலாம்

மேலும் பொன்மகள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அசல் ஆவணங்களுடன் திருச்சி மன்னார்புரத்தில் இயங்கி வரும் பொருளாதார குற்றப்பிரிவு, போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்