சென்னை
பிரபல ஆஸ்பத்திரியின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி உடல் உறுப்புகளை விற்று தருவதாக கோடிக்கணக்கில் மோசடி
|பிரபல ஆஸ்பத்திரியின் பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி உடல் உறுப்புகளை விற்று தருவதாக கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வந்த நைஜீரியா, உகாண்டா நாட்டை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த பிரபல ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் தங்கள் ஆஸ்பத்திரி பெயரில் போலி இணையதளத்தை உருவாக்கி, அதில் உடல் உறுப்புகள் விற்று தரப்படும் என்று போலி விளம்பரங்களை வெளியிட்டு பண மோசடி நடைபெறுகிறது. இந்த மோசடி நபர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் சிபி சக்ரவர்த்தி ஆகியோரது ஆலோசனையின் பேரில் பரங்கிமலை துணை கமிஷனர் மேற்பார்வையில் சென்னை தெற்கு மண்டல 'சைபர் கிரைம்' போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் இந்த மோசடி கும்பல் பெங்களூருவில் முகாமிட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 'சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். பனஜ்வாடி பகுதியில் தங்கியிருந்த 5 பேர் அடங்கிய மோசடி கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் நைஜீரியா மற்றும் உகண்டா நாட்டை சேர்ந்த பெண்கள் ஜெர்மியா (வயது 50), ஒலிவியா (25), மோனிகா (59) மற்றும் ராம் பகதூர் ரியாங் (31), ராம் ஜேம்சன் சிங் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து செல்போன்கள், வங்கி கணக்கு அட்டைகள், 'லேப்-டாப்' மற்றும் 'ஹார்டிஸ்க்' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இவர்கள் பல்வேறு மோசடி செயல்களை அரங்கேற்றி வந்தது தெரிய வந்தது. அதாவது, நுரையீரல், சிறுநீரகம் மாற்று உறுப்புகள் தானத்துக்கு ரூ.5 கோடி தருவதாக கூறி மோசடி, கருப்பு தாள்களை டாலரில் பணமாக மாற்றி தரும் ராசாயன விற்பனை மோசடி, வெளிநாடு வாழ் மாப்பிள்ளை பார்க்கும் மோசடி, ஆபாச வீடியோ அழைப்பு மோசடி, பார்சல் சர்வீஸ் மோசடி, ஆடைகள் விற்பனை மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த மோசடி செயலுடன் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த மோசடியில் கிடைக்கும் பணத்தை சேமிப்பதற்காக இந்திய வங்கி கணக்குகளையும் தொடங்கி உள்ளனர். பொதுமக்களிடம் எப்படி பேச வேண்டும்? என்பதை 'நோட்ஸ்' போன்று தயாரித்து வைத்து இந்த மோசடி செயல்களை அரங்கேற்றி வந்துள்ளனர். இவர்கள் பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர்.
எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.