< Back
மாநில செய்திகள்
நகைகள் வாங்க வந்த பெண்ணிடம் 40 பவுன் மோசடி; 3 பேர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

நகைகள் வாங்க வந்த பெண்ணிடம் 40 பவுன் மோசடி; 3 பேர் கைது

தினத்தந்தி
|
20 Dec 2022 12:41 AM IST

மகளின் திருமணத்துக்காக திருச்சியில் நகைகள் வாங்க வந்த பெண்ணிடம் 40 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மகளின் திருமணத்துக்காக திருச்சியில் நகைகள் வாங்க வந்த பெண்ணிடம் 40 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகைகள் வாங்க வந்த பெண்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கச்சேரிதெருவை சேர்ந்தவர் சிக்கந்தர்பாட்ஷா. இவருடைய மனைவி ஜரீனாபேகம் (வயது 40). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மகளின் திருமணத்துக்கு நகைகள் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனது உறவினரான திருச்சி கிருஷ்ணாபுரம் நடுத்தெருவை சேர்ந்த ராபியத்பசிரியாவின் (37) வீட்டுக்கு வந்து 40 பவுன் நகைகள் மற்றும் தங்க காசுகளை கொடுத்தார்.

உடனே அவர்கள் திருச்சி கடைவீதிக்கு சென்று ஒரு நகைக்கடையில் நகைகளை தேர்வு செய்தனர். அப்போது ராபியத்பசிரியா தனது பெயரில் ரசீதுகளை பெற்று கொண்டு நகைகளை சேதாரம் கழிக்காமல் வாங்கும் திட்டத்தில் வாங்கி வருவதாக கூறி ஜரீனா பேகத்தை அனுப்பி விட்டார். அவரும் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் ராபியத்பசிரியா நகைகளை வாங்கி வைத்து கொண்டார்.

3 பேர் கைது

அதன்பிறகு சில மாதங்களில் திருமணத்துக்கு தேவையான பொருட்களை ஜரீனாபேகத்திடம் இருந்து வாங்கி வைத்து கொண்டார். பின்னர் நகைகளையும், பொருட்களையும் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து பலமுறை கேட்டுப்பார்த்தும் கொடுக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜரீனா பேகம் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்த மோசடியில் ராபியத்பசிரியா மற்றும் அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராபியத் பசிரியா, அவரது கணவர் முகமது ரபிக், அவரது மகன் ஆலித் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்