சென்னை
அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை
|அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்திமுனையில் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகர், 4-வது பிரதான சாலை, 'வி' பிளாக் பகுதியை சேர்ந்தவர் சுஜரிதா (வயது 76). இவருடைய கணவர் இறந்து விட்டார். என்ஜினீயரான இவர்களுடைய மகன் முரளிதரன், அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கி, வேலை செய்து வருகிறார்.
இதனால் சுஜரிதா மட்டும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். அவருக்கு உதவியாக சிவகாசியை சேர்ந்த மகாலட்சுமி (45) என்பவர் அங்கேயே தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல் மூதாட்டி தனது அறையிலும், வேலைக்கார பெண் மகாலட்சுமி வீட்டின் ஹாலிலும் படுத்து தூங்கினா். அப்போது கதவை தாழ்ப்பாள் போடாமல் வெறுமனே சாத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் மர்மநபர்கள் நைசாக புகுந்தனர். அதில் ஒருவர் மகாலட்சுமியின் கழுத்திலும், மற்றொருவன் மூதாட்டி அறைக்குள் சென்று சுஜரிதா கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டினர். பின்னர் சுஜரிதா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகைகள், பீரோவில் இருந்த ரூ.1.40 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் வரும்போது வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளதால், இந்த கொள்ளை சம்பவத்துக்கு வேலைக்கார பெண் மகாலட்சுமியும் உடந்தையாக இருந்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
எனவே இது தொடர்பாக வேலைக்கார பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் நடந்த வீட்டின் அருகில் தான் அண்ணாநகர் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. போலீஸ் நிலையம் அருகிலேயே நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.