திண்டுக்கல்
ஏலச்சீட்டு நடத்தி மோசடி; கிராம மக்கள் புகார்
|வேடசந்தூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் புகார் அளித்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், பூதிப்புரத்தை சேர்ந்த துணி வியாபாரி ஒருவர் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் ஏலச்சீட்டில் இணைந்து பணம் கட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி அவர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். எனவே சீட்டு நடத்தி மோசடி செய்த வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.