< Back
மாநில செய்திகள்
பொதுமக்களிடம் முதலீட்டு தொகை பெற்று மோசடி: பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளில் அதிரடி சோதனை
சென்னை
மாநில செய்திகள்

பொதுமக்களிடம் முதலீட்டு தொகை பெற்று மோசடி: பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளில் அதிரடி சோதனை

தினத்தந்தி
|
20 Oct 2023 2:51 PM IST

பொதுமக்களிடம் முதலீட்டு தொகை பெற்று மோசடி செய்த புகாரின் பேரில் தமிழகம் முழுவதும் பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. சென்னையில் குரோம்பேட்டை, வேளச்சேரி பினீக்ஸ் மால் ஆகிய இடங்களில் இந்த நகைக்கடையின் கிளைகள் அமைந்துள்ளது. இது தவிர திருச்சி, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் போன்ற இடங்களிலும் இந்த நகைக்கடைக்கு கிளைகள் உள்ளன.

நடிகர்-நடிகைகள் மூலம் இந்த நகைக்கடைக்கு பெரியளவில் விளம்பரம் செய்யப்பட்டது. பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி முதலீட்டு தொகை பெறப்பட்டுள்ளது. மேலும் முதலீட்டு தொகை பெற்று நகைகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வந்தனர்.

பொதுமக்களிடம் முதலீட்டு தொகைக்கு முறையாக வட்டித்தொகை வழங்காமலும், நகை முதலீட்டு திட்டத்திலும் முறையாக நகைகளை பொதுமக்களுக்கு வழங்காமலும் மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தது. இதன் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நகைக்கடை மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து திருச்சி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த நகைக்கடையின் உரிமையாளர் மதன், அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் உள்ளிட்டோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார்கள் கொடுத்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்யபிரியா உத்தரவின் பேரில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பிரணவ் ஜுவல்லரி நகை கடைகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு வரையில் நீடித்தது.

சென்னையில் குரோம்பேட்டை, வேளச்சேரி பினீக்ஸ் மால் ஆகிய இடங்களில் உள்ள இந்த நகைக்கடைகளிலும் சோதனை நடைபெற்றது. திருச்சியில் 5 இடங்களிலும், மதுரை, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். சோதனை முடிவடைந்த பின்னர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் குறித்த விவரங்கள் பற்றியும், அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரணவ் ஜுவல்லரியின் திருச்சி கிளை மேலாளர் நாராயணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்