< Back
மாநில செய்திகள்
ரூ.9¾ லட்சம் பெற்று போலி ஆவணங்களை கொடுத்து மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

ரூ.9¾ லட்சம் பெற்று போலி ஆவணங்களை கொடுத்து மோசடி

தினத்தந்தி
|
22 April 2023 9:38 PM GMT

ரூ.9¾ லட்சம் பெற்று போலி ஆவணங்களை கொடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள்

திருச்சி பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட திட்டமிட்டார். இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு கருணாநிதி என்பவரை அணுகினார். அவர் குணசேகரன், கணபதி, சுப்பிரமணியன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, பட்டா மாறுதல் செய்ய, டவுன் சர்வேயில் பதிவு செய்ய என்று பலவகைகளில் அவர்கள் ரூ.4 லட்சம் முன்பணமாக பெற்றனர். பின்னர், அது தொடர்பான சில ஆவணங்களை அவரிடம் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, புதிய வீடு கட்டுவதற்காக ரூ.5 லட்சத்து 87 ஆயிரத்து 500 பெற்றுக்கொண்ட அவர்கள் அதன்பிறகு வீடு கட்டி கொடுக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த மாதம் மாநகராட்சி அலுவலகத்துக்கு கட்டிட அனுமதி பெறுவதற்காக ராஜேந்திரன் சென்றபோதுதான், அவர்கள் ரூ.4 லட்சம் வாங்கிக்கொண்டு கொடுத்த ஆவணங்கள் போலியானவை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் குணசேகரன், கணபதி, சுப்பிரமணியன், கருணாநிதி ஆகியோர் மீது செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கிலி-பணம் பறித்தவர் கைது

*திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது உறவினர் கார்த்திக் (31) என்பவர் தெப்பக்குளம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோவில் தெரு பகுதியை சேர்ந்த சேரன் (21), பாபு ரோடு பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (24) ஆகியோர் கார்த்திக்கிடம் 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.500-ஐ பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சேரன், சூரியபிரகாஷை கைது செய்தனர்.

* திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு டீக்கடை அருகே லாட்டரி சீட்டுகளை விற்றதாக ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த தினேஷ் (35), ரெயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்த பாண்டி (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், ரூ.5 ஆயிரத்து 950-ஐ பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்கள் கேட்டு தகராறு

* திருவானைக்காவல் பொன்னுரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (27). இவர் ஸ்ரீரங்கம் பாலக்கட்டை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த விஜய் (26), முத்துமணி (24) ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகையிலை பொருட்கள் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் கிருஷ்ணமூர்த்தியை பீர் பாட்டிலால் தாக்கினர். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், முத்துமணியை கைது செய்தனர்.

முதியவர் பலி

*திருச்சி ராம்ஜிநகர் அருகே நவலூர்குட்டப்பட்டு அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சின்னத்தம்பி(70). விவசாய கூலித்தொழிலாளியான இவர் அங்குள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க நடந்து சென்றார். அப்போது நவலூர்குட்டப்பட்டு சாலையில் வேகமாக வந்த சரக்கு வாகனம், சின்னத்தம்பி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிந்து, சரக்கு வாகன டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த அஷ்வினை(23) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்