கரூர்
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு
|கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கனடாவில் வேலை
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அகிலா கோபி, அருண் ரூபிஸ்ரீ, ரேவதி ஆகியோர் நேற்று கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தனர்.
அந்த மனுவில், நாங்கள் முகநூலில் வேலை இன் சிங்கப்பூர் என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு பேசினோம். அப்போது பேசிய அந்த நபர் கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த பஜுல் ரகுமான் என்றும், எனது அத்தை சம்சாத் பேகம் என்பவருடன் சென்னையில் உள்ள தங்களது ஏஜென்சி மூலமாக பலருக்கு சிங்கப்பூர் மற்றும் கனடாவில் வேலை வாங்கி தந்து உள்ளோம்.
பல லட்சம் கொடுத்தோம்
அதனால் நீங்கள் நேரில் வந்தால் அது குறித்து பேசலாம் என கூறினார். இதையடுத்து மேற்கண்ட 2 பேரையும் நேரில் சந்தித்து பேசினோம். அப்போது, அவர்கள் கனடாவில் மாதம் ரூ.1 லட்சத்திற்கு ேவலை இருப்பதாகவும், அதற்கு செலவுத்தொகையாக மட்டும் பல லட்சம் ஆகும் என்று கூறினர்.
இதையடுத்து முதலில் அவர்களிடம் ரூ.1 லட்சம் முன்பணமாக கொடுத்தோம். அதன்பிறகு வங்கி மூலமாகவும், நேரடியாகவும் மொத்தம் பல லட்சம் ரூபாயை பஜுல் ரகுமான், சம்சாத்பேகம் ஆகியோரிடம் கொடுத்தோம்.
மோசடி
இதையடுத்து அவர்கள் 2 பேரும் எங்களுக்கு கனடாவில் 2 ஆண்டுகள் வேலை செய்வதற்கான கடிதம், விசா போன்ற ஒன்றையும் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரித்தபோது வேலைக்கான கடிதம் மற்றும் விசா ஆகியவை போலியானது என்றும், பணத்தை பெற்று 2 பேரும் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஆனால் இதுவரை அவர்கள் எங்களை கனடாவிற்கு வேலைக்கு அழைத்து செல்லவில்லை.
இதையடுத்து அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டால் பணத்தை திருப்பி தராமல் மிரட்டி வருகின்றனர். எனவே பணம் பெற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.