< Back
மாநில செய்திகள்
தனியார் உணவுப்பொருள் நிறுவனத்திற்கு  பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.59½ லட்சம் மோசடி செய்தவர் கைது  பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்
மாநில செய்திகள்

தனியார் உணவுப்பொருள் நிறுவனத்திற்கு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.59½ லட்சம் மோசடி செய்தவர் கைது பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
15 Dec 2022 12:15 AM IST

தனியார் உணவுப்பொருள் நிறுவனத்திற்கு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.59½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். அவரது மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


விழுப்புரம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 52). இவர் தனியார் உணவுப்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். சென்னை திருக்கச்சூர் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த கமல்ராஜ் (49), அவரது மனைவி சுரேகா ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள கார்த்திகேயனுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வந்து தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

அப்போது கார்த்திகேயனிடம் குறைந்த விலையில் மளிகைப்பொருட்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வாங்கித்தருவதாக அவர்கள் இருவரும் கூறினர். மேலும் தாங்கள், விற்பனை பிரதிநிதிகள் நலவாழ்வு நலச்சங்கம் நடத்தி வருவதாக கூறி அச்சங்கத்தில் இணைத்துக்கொள்வதாக கூறி கார்த்திகேயனுக்கு மாநில செயலாளர் பதவி வழங்கியுள்ளனர்.

ரூ.59½ லட்சம் மோசடி

மேலும் கார்த்திகேயனுக்கு பல வியாபாரிகளை அறிமுகப்படுத்தி அவர்களிடமிருந்தும் உணவுப்பொருட்கள் வாங்கித்தருவதாக கமல்ராஜ், சுரேகா ஆகியோர் கூறினர். இதை நம்பிய கார்த்திகேயன், அந்த 2 பேர் நடத்தி வரும் மார்க்கெட்டிங் வங்கி கணக்கில் பல தவணைகளாக ரூ.66 லட்சத்து 30 ஆயிரத்து 658-ஐ செலுத்தியுள்ளார். பணத்தை பெற்ற அவர்கள் இருவரும், கார்த்திகேயனுக்கு உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எதுவும் வழங்காமல் அலைக்கழித்துள்ளனர்.

உடனே அவர்கள் இருவரிடமும் சென்று, தான் அனுப்பிய பணத்தை திருப்பித்தருமாறு கார்த்திகேயன் கேட்டதற்கு ரூ.7 லட்சத்து 22 ஆயிரத்து 100-ஐ மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள ரூ.59 லட்சத்து 45 ஆயிரத்து 730-ஐ கார்த்திகேயனுக்கு கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததோடு பணத்தை தரும்படி கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

ஒருவர் கைது

இதுகுறித்து கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கமல்ராஜ், சுரேகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று கமல்ராஜை போலீஸ் துணை சூப்பிரண்டு உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.

சுரேகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்