கிருஷ்ணகிரி
இரட்டிப்பு லாபம், வேலைவாய்ப்பு எனக்கூறி வாலிபர்களிடம் ரூ.18.84 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
|கிருஷ்ணகிரி:
இரட்டிப்பு லாபம், வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி 3 வாலிபர்களிடம் ரூ.18 லட்சத்து 84 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் கவியரசன் (வயது 28). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி குறுந்தகவல் ஒன்று வந்தது. இதில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கவியரசன் ரூ.1,000 அனுப்பிய நிலையில் அவருக்கு ரூ.2 ஆயிரம் கிடைத்தது. இதனால் நம்பிக்கை அடைந்த கவியரசன் அடுத்தடுத்து பல்வேறு தவணைகளில் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 199-ஐ அனுப்பினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவியரசன் இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுதி நேர வேலை
இதேபோல் ஊத்தங்கரை பி.மல்லிப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (33) என்பவரின் செல்போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. ஆனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராஜ்குமார் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்தை பல்வேறு தவணைகளில் அனுப்பினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த என்னேகோள் புதூர் ஒட்டப்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிஷ் (27) என்பவரின் செல்போனுக்கு கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி வந்த குறுந்தகவலை நம்பி ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்