< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி
விருதுநகர்
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
3 Jun 2023 6:45 PM GMT

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் பட்டதாரி

ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் குமார்(வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரி. இவரது நண்பர் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு கண்ணன். இவர் மூலம் சிவகாசி சித்துராஜபாளையத்தை சேர்ந்த அய்யப்பன் அறிமுகமானார். பிரபு கண்ணன் தான், அய்யப்பன் மூலம் அரசு வேலை பெற்றுள்ளதாகவும், எனவே அவர் மூலம் அரசு வேலை பெறலாம் என்றும் கார்த்திக் குமாரிடம் தெரிவித்தார். இருவரும் அய்யப்பனை சந்தித்தனர்.

அய்யப்பனின் மனைவி மாலா, மகன் விஷ்ணு சென்னையில் உள்ள தங்களது மருமகன் அருண்குமார் மூலம் அரசு வேலை பலருக்கு பெற்று தந்துள்ளதாகவும் மின்வாரியத்தில் உதவி என்ஜினீயர் வேலைக்கு ரூ.20 லட்சம் தர வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து கார்த்திக் குமார் சென்னை சென்று உதவி என்ஜினீயர் வேலைக்கான தேர்வு எழுதிவிட்டு திரும்பிய நிலையில் பிரபு கண்ணன் கார்த்திக் குமாரிடம் வேலைக்கான பணிநியமன உத்தரவு அய்யப்பனிடம் உள்ளதாகவும், உடனடியாக பணத்தை செலுத்துமாறு அய்யப்பனின் வங்கி கணக்கு எண்ணை தெரிவித்தார். இதனை தொடர்ந்து கார்த்திக் குமார் ரூ.9 லட்சத்தை தனது வங்கி கணக்கிலிருந்து அய்யப்பனின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். மேலும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை அய்யப்பன் வீட்டுக்கு சென்று மாலாவிடம் கொடுத்தார்.

5 பேர் மீது வழக்கு

மேலும், மீதமுள்ள பணத்தையும் தந்தால்தான் பணிநியமன உத்தரவு தரப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் அய்யப்பனும், அவரது குடும்பத்தாரும் பணி நியமன ஆணை தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்ததை உணர்ந்த கார்த்திக் குமார் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

அவரது உத்தரவின் பேரில் பிரபு கண்ணன், அய்யப்பன், மாலா, விஷ்ணு, அருண்குமார் ஆகிய 5 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்